சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Foreign Visit-Mauritius

At the time of taking class in Mauritius - 2014

உண்மையை உரக்கப் பேசு!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

நல்ல கல்வியை நோக்கி!

கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)

எதிர் நீச்சல்

போராடக் கற்றுக்கொள்!

Tuesday, 4 October 2022

குறுங்காடு திட்ட துவக்க விழா

குறுங்காடு திட்ட துவக்க விழா மற்றும் உழவை நேசிக்கும் உழவருக்கு விருது வழங்கும் விழா குடந்தை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக SRVS வளாகத்தில் சிறப்புடன் நடைபெற்றது. மிக்க மகிழ்ச்சி...
#மியாவாக்கி | #குறுங்காடு | #அடர்வனம் | #சுற்றுச்சூழல் #AYS 23.09.2022

Thursday, 5 May 2022

கோடைவெயிலுக்கு ஏற்றது நுங்கு

 கோடைவெயிலுக்கு ஏற்றது நுங்கு ..! 


உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை கொடுப்பதிலும்  உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.  





குளிர்பானங்கள் குடிப்பதைவிட

நுங்கு ஆகச் சிறந்தது... 


கட்டுமாவடி -அறந்தாங்கி சாலை நெம்மலிக்காடு நுங்கு வியாபாரி பழனியப்பனிடம் நுங்கு வாங்கி சுவைத்தோம். லாவகரமாக நுங்கை வெட்டுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். சாலையோர வியாபாரிகளிடம் பேரம் பேசாமல் நுங்கு, கிழங்கு, பதநீர், மோர், தர்பூசணி போன்றவைகள் சுவைத்து பாருங்கள். அவர்கள் வாழ்வுக்கும் சுவையூட்டுங்கள்... 


- ஆவுடை யூனுஸ்

Wednesday, 23 March 2022

வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க...

 வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க... 


#நெஞ்சுக்கு_நீதி, #உங்களில்_ஒருவன் இரண்டு நூல்களை வாங்கி இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்ப முடியுமா? கழகத் தோழரின் அழைப்பு! 


நலன் விசாரித்த பிறகு...

...

...

... 


ம்ம்... கட்டாயம் வாங்கி அனுப்புகிறேன் என கூறி வாட்சப் (பகிர்வஞ்சல்) அழைப்பை துண்டித்துக் கொண்டேன். 


மறுநாள் மலேசியா நண்பருக்கு நான் கால் செய்து... 


புத்தகம் இங்கே கிடைக்கவில்லை. சென்னையில் எனக்கு தெரிந்த தமிழ் மற்றும் கணினி ஆர்வம் உள்ள நண்பர் இருக்கிறார். அவரிடம் தொடர்புக் கொண்டு வாங்கி எனக்கு அனுப்ப சொல்லுகிறேன். பிறகு எனக்கு கிடைத்தவுடன் நான் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறினேன். 


ம்ம்ம்... அதற்கான பணத்தை அக்கௌன்டில் ட்ரான்ஸ்பர் செய்கிறேன் என்றார். 


பணம் இருக்கட்டும் முதலில் நீங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி அனுப்புகிறேன்.

மீதி அப்புறம் பேசிக்கொள்வோம்... 


சென்னையில் இருக்கும் எனது நெருங்கிய நண்பர், அவருக்கு தெரிந்த நண்பரிடம் கூறி இரண்டு நூல்களையும் வாங்கி, பாதுகாப்பாக எனக்கு இந்திய பார்சல் சர்விஸில் அனுப்பி வைத்தார். 


புத்தகப் பார்சல் கையில் கிடைத்த உடன் பலநாள் பசியில் இருந்தவன் உணவு பொட்டலத்தை பிரிப்பதைப் போல் பிரித்து ஆர்வமாக சில பக்கங்களை வாசித்தேன்... மனசாட்சி லேசாக குத்தியது.! 


ஓசியில் படிக்க வேண்டாம் காசுக்கொடுத்து பிறகு வாங்கி முழுவதையும் படிப்போம் என பசி தீரும் முன்பே புத்தகத்தை மலேசியா அனுப்ப பார்சல் செய்து,

தனியார் கூரியர் ஆபீஸ்க்கு போனேன். எடை போட்டார்கள் 1.6 kg இருந்தது. இதை 2 kg கணக்கில் எடுத்துக் கொள்வோம். கணிணியில் பார்த்து சுமார் 4000 ரூபாய் வரும் என்றார். இரண்டு புத்தகத்தின் விலை 1000 ரூபாய் , கூரியர் அனுப்ப 4000 ரூபாயா என்று வாயை பிளந்து மூடுவதற்குள், அவரே ஒரு வழியையும் சொன்னார் இந்தியன் போஸ்டல் சர்வீஸில் அனுப்புங்க காசு குறைவாக வரும் என்று... 


அடுத்து பைக்கை செல்ப் ஸ்டார்ட் செய்து போஸ்ட் ஆபீசுக்கு 2.00 மணிக்கு போனேன். சார் பார்சல் அனுப்பும் டைம் முடிந்துவிட்டது. நாளைக்கு வாங்க என்றார் அலுவலர். சரி நாளைக்கு வருகிறேன் இந்த பார்சலுக்கு எவ்வளவு ஆகும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க என்றேன். 


உள்ளே என்ன இருக்கு?

புத்தகம் என்றேன். 


புத்தகம்தான் இருக்கு என்று எப்படி நம்புவது. 


ஏர்போர்ட்டில் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள் அது போல் ஸ்கேன் செய்து பாருங்க என்றேன். 


அதுலாம் இங்கே இல்லை! 


பார்சலை பிரித்து நாங்க செக் செய்த பிறகு, இங்கேதான் அதை நீங்க மீண்டும் பார்சல் செய்ய வேண்டும் என்றார்கள்.

என்னடாயிது இப்பதான் பார்சல் செய்தேன் மறுபடியும் பிரிக்க வேண்டுமா என மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டே.... 


சரி எவ்வளவு ஆகும் மேடம் என்றேன்... 


Ordinary யா speed டா என மெதுவாக கேட்டார்கள். என்ன மேடம் புரியல

Ordinary யா speed டா என்று இந்த முறை சத்தமாக கேட்டார்கள். Ordinary எவ்வளவு? Speed எவ்வளவு? என வினவினேன். 


Ordinary போஸ்ட் 1070 ரூபாய் Speed போஸ்ட் 1700 ரூபாய் என்றார்கள். சரி என்று கிளம்பினேன். 


சார் ஒரு நிமிஷம் என்ற குரல் ஒலித்தது...

சொல்லுங்க மேடம்...

சார் நாளைக்கு வரும்போது ஆதார் கார்டு ஜெராக்ஸ் இரண்டு காப்பி கொண்டுவாங்க... 


ம்ம்ம்... என்று கிளம்பிவிட்டேன்... 


மறுநாள் காலை 11 மணிக்கு

குடந்தை போஸ்ட் ஆபீஸ்க்கு விரைந்து சென்றேன்... 


பார்சலை பிரித்து, உள்ளே என்ன இருக்கிறது என செக் செய்தார்கள். அவர்கள் அனுமதியுடன் அங்கிருந்த செல்லோ டேப்பை எடுத்து மீண்டும் ஒட்ட ஆரம்பித்தேன். 


சார் எல்லாத்தை சுத்தி முடித்து விடாதீர்கள். சரி நீங்க வெளியே போய் அலைய வேண்டாமென்று கொடுத்தேன். பார்த்து சார்... 


சரிம்மா என்று குறைந்த அளவே செல்லோ டேப்பை பயன்படுத்தி ஒரு வழியாக ஒட்டி முடித்தேன். கையெழுத்து இட்ட

ஒரு ஆதார் கார்டு ஜெராக்ஸ் காப்பியை பார்சல் மேலே ஒட்டினார்கள். 


ஓகே சார் அங்கே இருக்கும் கவுண்டரில் கொடுங்க என்று கையை காட்டினார்கள்... 


நேற்று விசாரித்த கவுண்டருக்கு வந்தேன். சார் நான் கொஞ்சம் பிசி!

பக்கத்துக்கு கவுண்டரில் கொடுங்க என்ற குரல் ஒலித்தது... 


பக்கத்துக்கு கவுண்டரில் கொடுத்தேன். சார் இங்கே சிஸ்டம் சரியாக காட்டமாட்டேங்குது... அங்கேயே கொடுங்க! 


மறுபடியும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றேன். எல்லாத்தையும் சரி செய்து பார்த்து விட்டு, பணம் 1070 ரூபாயை வாங்கி கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டு, சார் பில் எங்கே என்றார். அதற்கு நான், பில் நீங்கத்தான் கொடுக்க வேண்டும் என்றேன். சா....ர் புத்தகம் வாங்கிய பில், என்னிடம் இல்லை என்றேன் (புத்தகத்துடன் நண்பர் அனுப்பிய பில்லை தொலைத்து விட்டேன்). 


எனக்கு தெரியாது பில் இருந்தால் மட்டும்தான் வெளிநாட்டுக்கு அனுப்புவோம் என்றார்கள் அலுவலர். நான் பொறுமை இழந்து சரிம்மா நான் படித்த பழைய புத்தகத்தை அனுப்ப வேண்டும், வீட்டில் செய்த முறுக்கை அனுப்ப வேண்டும் பில்லுக்கு எங்கே போவது கொஞ்சம் நேரம் வாக்கு வாதம். அந்த அலுவலர் தலைமை அதிகாரியை பார்த்து நடந்த விஷயத்தை கூறினார்கள். கவுண்டர் அருகில் வந்து அந்த அலுவலர் சார் உங்க பார்சலை அனுப்புகிறோம் ஆனா ஒன்னு... என்று இழுத்தார்..... 


என்ன சார் என்றேன். 


திரும்பி வந்தால் அதற்காக பில் தொகை 1070 ரூபாயை செலுத்தி இந்த பார்சலை பெற்றுக் கொள்வேன் என்று ஒரு பேப்பரை நீட்டி கையெழுத்து போட சென்னார்கள். 


நான் உடனே வேண்டாம் சார், புத்தம் அனுப்பும் ஆசையே விட்டுபோய் விடும் போல் இருக்கு... 


நான் பில்லோடு வருகிறேன்... நான் ரெகுலராக புத்தகம் வாங்கும் கடையில் பில் வாங்கி இந்த பார்சலின் மேல் ஒட்டி , அடுத்த 10 நிமிடத்தில் அதே கவுண்டரில் நின்றேன். அந்த அம்மா மெல்லிய குரலில் சார் சிஸ்டம் restart செய்துள்ளேன். பக்கத்துக்கு கவுண்டரில் கொடுங்க என்றார். 


கொஞ்சம் கணீரென்ற குரலில் எனக்கும் கம்ப்யூட்டர் தெரியும். restart ஆகும் வரை வெயிட் செய்கிறேன்... 


இந்தாங்க பணம் என நேற்று திரும்பி வாங்கிய 1070 ரூபாயை செலுத்திவிட்டு, 2 நிமிடம் வெயிட் செய்தேன்.... 


பின்பு ஓரு வழியாக என்ட்ரி போட்டு, பில் கொடுத்தார்கள். மீதமுள்ள ஒரு ஆதார் கார்டு, Reciept -ல் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு bill லை பெற்றுக் கொண்டு நடையைக் கட்டினேன்... 


கடைசியாக வரும்போது அந்த மேடத்திடம் இந்த அனுபவத்தை எழுதலாம் என இருக்கேன் என்றேன் சிரித்துக் கொண்டே... 


ஓ தாராளமாக.... 


(பார்சல் போய் சேர 20 - 25 நாட்கள் அதிகமாகும் என்றார்கள். 12 நாட்களுக்குள் பெறுநர் பெற்றுவிட்டார். நீங்கள் படத்தில் பார்க்கும் நண்பரின் சிரிப்பில் தெரிகிறது... நிச்சயம் அனைத்து பக்கங்களையும் படித்துவிடுவார்... 



மலேசியா வரும் நண்பர் யாரிடமாவது இரு புத்தகங்களையும் கொடுத்து அனுப்பவா என கேட்டேன். வேண்டாம் அஞ்சலில் அனுப்பிவிடுங்கள் என்றார்.

இந்நூல்களை வாங்கி படிக்க வேண்டுமேன ஆர்வமாக இருந்த நண்பர் #நியமத்_அப்துல்_ரகீம்.

அவரின் வாசிப்பு விருப்பத்தை பாராட்டுகிறேன். 


தமிழ், கணிணி இரண்டிலும் ஆர்வமுள்ள நெருங்கிய நண்பர் R. #அகிலன் அவர்கள்தான், நான் கைபேசியில் தொடர்பு கொண்டவுடன் புத்தகங்களை வாங்கி பாதுகாப்பாக பார்சல் செய்து எனக்கு அனுப்பியவர். அவரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. 


குறிப்பு:

1.குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு பார்சல் அனுப்ப தனியார் கூரியர் சர்வீஸை விட இந்தியன் பார்சல் சர்வீஸ் சிறந்தது. 


2. பார்சல் போய் சேர 20 - 25 நாட்கள் ஆகும். 


3. பார்சல் திரும்பி வந்தால் அனுப்புனர் பணத்தை செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். 


4. ஆதார் நகல் இரண்டு தேவை. 


5.பார்சலை தபால் நிலையத்திற்கு சென்று கட்டுங்கள்/ஒட்டுங்கள். 


6. அனுப்பும் பொருளுக்கு பில் வேண்டும். 


7.விலாசத்தை ஆங்கிலத்தில் CAPITAL LETTER- ல் தெளிவாக எழுதுங்கள். 


8.குறிப்பாக ஒரு பேனா கொண்டு போங்கள். அங்கே இரவல் வாங்க வேண்டாம்


- ஆவுடை யூனுஸ்

24.03.22

Saturday, 19 February 2022

இது பாட்டி வடைச்சுட்ட கதையல்ல

 யாப்பா நீ ஓட்டு போட கிளம்பலயா?

இல்லை பாட்டி.! 


ஊரு ஊராய் ஓட்டுக் கேட்டா. இப்போ ஓட்டு மட்டும் போடலங்கற. 


நீ செய்றது சரியாப்பா? யாரும் காசு தரலையா. 


இல்லை பாட்டி இது வேற 


இப்போ மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு மட்டும் தான் உள்ளாட்சி தேர்தல் நடக்குது. 


ஊராட்சிக்கு 2019 ல் அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே நடந்து விட்டது. எங்க ஊரு ஆவுடையார் பட்டிணம் ஊராட்சியின் கீழ் வருது அதனாலே இப்போ அங்கே தேர்தல் இல்ல பாட்டி. 


எனக்கு ஒன்னும் புரியலப்பா. இருந்தாலும் ஒன்னு செல்லுரே

இந்த பாட்டி சொன்னா கேட்பியா? 


பாட்டி சொல்லை தப்பமாட்டே

சொல்லுங்க பாட்டிம்மா. 


பச்சை பொய் பழனிசாமியையும், ஆட்டுக்குட்டி அண்ணாமலையும் கிட்டே நெருங்க விடாதே.

மனச மாத்தி நாட்டை கெடுத்து புடுவாங்க. 


பார்த்து சமத்தா இருந்துக்கோ பேரா... 


பாட்டி ஒரு நிமிசம்.! 


என சொல்லி முடிப்பதற்குள்

தலையை திருப்பி என் புன்னகையை பார்த்து புரிந்துக் கொண்டது அப்பாட்டி!


சரிப்பா நான் ஓட்டு போட்டுட்டே.

கிளம்புறேன்...


செத்த இத சரி பண்ணிக் கொடுப்பா என மூக்கு கண்ணாடியை நீட்டியது.


பாட்டி இத மாத்திடுவோம். ரொம்ப பழசா இருக்கு.


அடியாத்தி! 

இது அவுங்க வாங்கி கொடுத்தது. இப்போ அவுங்க இல்லை இது மட்டும்தான் இருக்கு அவரு ஜாபகமாக...


உடனே நிலைமையை புரிந்துக் கொண்டு அந்த கண்ணாடியை "கம்லீட் சர்வீஸ்" செய்து கொடுத்தவுடன்...


எவ்வளவுப்பா பேரா? என்றாள் பாட்டி


கலைஞரு "கண் ஒளி திட்டத்தை" இலவசமாக கொண்டு வந்தாரு. அட்லீஸ்ட் நான் இத கூட

இலவசமாக செய்தா குறைந்தா போய்விடுவேன். அதனால நம்ம கடையில் சர்விஸ், ஐ டெஸ்ட் பிரீதான் பாட்டி...


நீ நல்லா இரு... இந்த பாட்டியோட ஆசிர்வாதம் என்றும் உனக்கு உண்டு...

என சொல்லிவிட்டு

நடந்தே சென்றது 90 வயது மதிக்கத்தக்க அந்த பாட்டிம்மா!


-ஆவுடை யூனுஸ்

Saturday, 12 February 2022

தீட்டு

மாதத்தீட்டு
மூன்றுநாளில்!
காமத்தீட்டு
குளிக்கும் வரையில்!
சாதித்தீட்டு 
எத்தனை நாளைக்கு
சகமனிதா?
மதத்தீட்டு
மரணம் வரை
தொடர்கதையா..!

உயிருக்கு ஊசலாடும்
#மனிதத்தை
குருதிக் கொடுத்து
காப்பாற்ற
குருஜி வரமாட்டார்
நீதான் வர வேண்டும்...

✍ஆவுடை யூனுஸ்

Tuesday, 8 February 2022

ஏன் தூக்கம் வரவில்லை

 1.தூக்கம் வரவில்லை/

தீர்ந்துப் போனது/

அரிசி!


2.தூக்கம் வரவில்லை/

தீர்ந்துப் போனது/

மாத்திரை!


3.தூக்கம் வரவில்லை/

நீண்டுப் போனது/

இரவு!





4.தூக்கம் வரவில்லை/

நீண்டுப் போனது/

கற்பனை!


5.தூக்கம் வரவில்லை/

மாண்டுப் போனது/

நீதி!


6.தூக்கம் வரவில்லை/

மாண்டுப் போனது/

பண்பாடு!


✍ஆவுடை யூனுஸ்

ஹிஜாப்

 அறிவுக்கும்

வீரத்துக்கும்

உடை என்றும்

தடை இல்லை...

அதற்கு முஸ்கான்

வீரமாணவியே சான்று...


தீண்டாமை 

எந்த கோணத்தில்

வந்தாலும்

விரட்டி அடி...

திருப்பி அடி...


ஓ தீயசக்தியே!

வழி விடு...

வாழ விடு...

படிக்க விடு...



ஓ பெண்ணே!

முடிவெடு

முயற்சியெடு

பயிற்சிப் பெறு

வாகை சூடு...


படிப்புதான் ஆயுதம்!

பகுத்தறிவுதான் பேராயுதம்!


அல்லாஹ் அக்பர்!


- ஆவுடை யூனுஸ்

Saturday, 5 February 2022

கால் படாத காடு

 பூமியின் இயற்கை வளத்தை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் மனிதனின் கால் படாத காட்டுக்குள் சென்று பாருங்கள்.!



உரமிடப்படாத நிலம்!

உழுவப்படாத நிலம்!

நெகிழியில்லாத நிலம்!


பறவைகளும், விலங்குகளும் பரவசமாக வாழும் இடம்...!


சுவர்க்கம் போல் காட்சியளிக்கும்!


- ஆவுடை யூனுஸ்


#காடு #மரம் #நிலம் #இயற்கை #சுற்றுச்சூழல்

ஆறுதல்

 அதோ!

தொட்டுவிடும் தூரத்தில்

யாரும் தொட்டுவிடும் முன்பே

மெல்ல மெல்லச் சென்று

தம்பி கிடைத்து விட்டான்

என்று பொம்மையை

தொட்டுக் கட்டியணைத்து

ஆறுதல் தேடியது

அனாதைக் குழந்தை!



✍ஆவுடை யூனுஸ்

வெற்றி உன்னை தேடிவரும்

 ஒருவன் எதை செய்கிறானோ அதையே தானும் செய்ய வேண்டுமென நினைத்து, தன் சுயத்தை இழக்காதே!


தனக்கு என்ன வருமோ அதையே செய்...


உலகம் பறந்து விரிந்தது. உலகத்தை கண் திறந்து

மனம் திறந்து பார்...


ஆயிரம் விசயங்கள் உண்டு. அதில் சரியானதை தேர்ந்தெடு.


வெற்றி உன்னை தேடிவரும்...

மாலை உன் கழுத்தில்

தொங்க தவமிருக்கும்...


உனக்கான பாதை உன்னைவிட வேறு யாருக்கும் நன்றாக தெரியாது!


தேர்ந்தெடு தேர்ச்சிப்பெறு...


✍ஆவுடை யூனுஸ்

ஹிஜாப் அணியலாமா?

 பொட்டு வைப்பதும்

பூ வைப்பதும்

சிலுவை அணிவதும்

தொப்பி போடுவதும்

பட்டை அடிப்பதும்

நகையணிவதும்

கண்ணாடி போடுவதும்

சாயம் பூசுவதும்

ஒப்பனை செய்வதும்-

Extra curriculum activities!


ஆடை அணிவது

மட்டுமே -

Main Subject!

ஏனெனில் இது

மானத்தை காத்து

மரியாதையை கூட்டும்...


விலங்கிலிருந்து நம்மை

வேறுபடுத்திக் காட்டுவது

சிரிப்பு,

ஆடை,

பகுத்தறிவு!


ஒரு மனிதனை சிரிக்காதே, சிந்திக்காதே என்று எப்படி கூற முடியாதோ. அது போல கண்ணியமான ஆடை அணியாதே என்று யாரும் கூற முடியாது!

கூறவும் கூடாது.





கிழித்து விட்டு அலைவதுதான் சுதந்திரம் என்றால்

Border -ல் கூட 

தேர்ச்சிப் பெற முடியாது!


மற்றவர்கள் முகம் சுளிக்காமல்

வண்டுகள் சுற்றிவராமல்

இருக்க கண்ணியமான

ஆடை சமுதாயத்தில்

பெரும்பங்காற்றுகிறது...


#ஹிஜாப் அணிவதால்

பெண் பாதுகாப்பாக

உணர்கிறாள்...

இது அவளில் அடையாளம்

இது அவாலுக்கு புரியாது!


✍ஆவுடை யூனுஸ்


#hijab