சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Monday, 10 September 2018

மரம் நமது சொத்து


“மரம் நமது சொத்து”

மு. முகமது யூனுஸ்
(ஆவுடை யூனுஸ்)

            மரம் நிலத்தில் விதையிலிருந்து தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். தாவர இனத்தின் பரிணாம வளர்ச்சியின் உச்ச வரம்புதான் மரம். அம்மரத்தை நாம் அனைவரும் நம் வருங்கால சந்ததியர்களுக்கு விட்டு செல்லக்கூடிய மரம்தான் இயற்கை சொத்து. தண்ணீரில் தோன்றிய முதல் உயிர் தாவரம். அத்தாவரம் முதலில் தண்ணீரில் வாழக்கூடியதாகவும், பின்பு தரையில்  வாழக்கூடியதாகவும் மாறின. புல்லாகி, பூண்டாகி,செடியாகி, கொடியாகி கடைசியில் மரமாக பரிணாமிக்கிறது.

            நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் நம் முன்னோர்கள். இனி வருங்காலங்கள் தண்ணீருக்காக மட்டுமல்ல நிழலுக்காகவும் ஏங்கும் காலம் வந்து விடுமோ என்ற சந்தேகம் தோன்றுகிறது.மரம் மரம் என்கிறோமே மரம் நமக்கு என்ன தருகிறது? என்ற வினா தோன்றலாம். மரம் நமக்கு பற்பல பயன்களை தருகின்றன. உதாரணமாக காரை நிறுத்த வேண்டுமென்றாலும் சரி ,கூரை போட வேண்டுமென்றாலும் சரி அல்லது ஊரை காக்க வேண்டுமென்றாலும் சரி மரம் தேவை.


மரம் நமக்கு
            மலரை தருகிறது,
            காயை தருகிறது,
            கனியை தருகிறது,
            நிழலை தருகிறது,
            குளிர்ச்சியை தருகிறது,
            மழையை தருகிறது,
            காற்றை சுத்தப்படுத்துகிறது,
            ஆக்சிஜனை வெளியிடுகிறது,
            கரிக்காற்றை கிரகித்துக் கொள்கிறது.,
            மண் அரிப்பைத் தடுக்கிறது,
            நிலச்சரிவுகளை தடுக்கிறது,
            நிலத்தடி நீர் அதிகரிக்கிறது,
            காய்ந்த சருகு இலைகளை மண்ணுக்கு உரமாக தருகிறது.

தொல்காப்பியத்தில் 52 தாவரங்களும், சங்க இலக்கியத்தில் 207 தாவரங்களும், சங்கம் மருவிய காலத்தில் 185 தாவரங்களும்,பக்தி இலக்கியக் காலத்தில் 238 தாவரங்களும், குறிப்பிடபட்டுள்ளன. அந்த மரங்களெல்லாம் எங்கே? சற்று சிந்தித்து பார்க்கவேண்டும்.

ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. பூமி தோன்றிய காலத்தில் எங்கு நோக்கினாலும் மரம், செடி, கொடி பசுமையாக எங்கும் காட்சியளிக்கும் இந்த பூமி!. அப்போது இருந்த மரத்தில் 2% விழுக்காடு மரங்கள் கூட இப்போது இல்லை. மனிதன்  சுயலாபத்திற்காக பெரும்பான்மையான மரங்களை அழித்துவிட்டான். 

இப்போது நாம் என்ன செய்ய? ஒன்றே ஒன்று செய்.
புரட்சி செய்!
பசுமை புரட்சி செய்!
இயற்கை உரத்துடன் எழுச்சி செய்!


ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும்.

ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

1.
ரூ 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
2.
ரூ 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
3.
ரூ 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
4.
ரூ 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.  

            அரசு  நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பல லட்சங்களை செலவிடுகின்றன.இவைகள் அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன. அரசுக்கு இலவச திட்டத்தை கற்றுக்கொடுத்ததே மரம்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. அரசு அரிசியை வைத்து அரசியல் செய்கிறது. மரங்களுக்கு துளிகூட அரசியல் தெரியாது. மரங்களின் அரசன் அரச மரதிற்கு கூட அரசியல் தெரியாது.   மரங்களுக்கு சாதி, மதம் தெரியாது அதனால்தான்   வெயிலிருந்து வருபவர்களுக்கு நிழலை கொடுக்கும், தாகம் என்று வருபவர்களுக்கு நீரை கொடுக்கும், பசி என்று வருபவர்களுக்கு பழங்கள் கொடுக்கும் , நோய் என்று வருபவர்களுக்கு மருந்தை கொடுக்கும் வரமாக மரம் இருக்கின்றன.

பூமி வெப்பமாகி வரும் இந்த காலகட்டத்தில் பச்சைக் குடைப் பிடித்து பூமியைப் பாதுகாக்க வேண்டுமானால் மரங்களை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்என்பது அன்றைய வழக்கு,
“ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது  நேற்றைய இலக்கு,
“ஆளுக்கு இரண்டு மரம் வளர்ப்போம்” என்பது ஆழ்வார் வாக்கு.

இந்த வருடத்தின் நமது குறிக்கோள்
ஆளுக்கு பத்து
அதுதான் நமது சொத்து!

            மனிதன் தலையில் முடிகளுக்கு  பதிலாக  செடிகள் வளருமாறு இறைவன் இவ்வுலகில் மனிதனை படைத்திருந்தால், மரங்களை  வெட்டுவது போன்று மனிதர்களையும் வெட்டி கொலை செய்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிப்பிற்குள்ளான இக்காலக் கட்டத்தில் ரோபோக்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆர்வமாக இருக்கின்றோம். செடிகள் நட இடமில்லையென்று கூறி நடமாடும் ரோபோக்களை உருவாக்கி, அதில் செடிகள் வளர்த்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆகையால், நாம் இருக்கும் இடத்தை பயன்படுத்தி விதைகளை விதைக்க , செடிகளை நட ஆர்வமாக செயல்பட வேண்டும்.

            நீர் இல்லாமல் உலகில் எந்த உயிரும்  வாழ இயலாது. நீருக்குக் காரணமான மழை பெய்யாவிட்டால், பசியால் ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும்.

இதைதான் வள்ளுவர்
“நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு”   என்று கூறுகிறார்.

நிலத்திலும், கிணற்றிலும் தண்ணீர் கிடைக்கும் என்ற காலம் போய்
அடைக்கப்பட்ட நெகிழி  குப்பிகளில்தான்  தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் வருங்கால குழந்தைகள் வளர்ந்து விடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மக்கள் பயனுற செய்யும் மூன்று செயல்கள் நிலையான தர்மங்கள் ஆகும். அவைகள் மக்கள் தாகம் தீர்க்க கிணறு வெட்டுவது,அறியாமை அகற்றும் கல்வி புகட்டுவது, நிழல் தரும் மரம் நடுவது ஆகும். இவைகள் மூன்றும் நாம் மறைந்த பிறகும் நமக்கான நன்மைகளை தேடித் தரும்.


ஒரு மரத்தை நடுவதற்கான மிகச் சிறந்த சந்தர்பம் 20 வருடங்களுக்கு முன்பாகும், இரண்டாவது சந்தர்பம் இன்றேயாகும்” என  சீனப் பழமொழி மரம் நடும் முக்கியத்துவதை கூறுகிறது.

கிளி வளர்த்தேன் பறந்து விட்டது!
அனில் வளர்த்தேன் ஓடிவிட்டது!
மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்துவிட்டது.”  என A.P.J அப்துல் கலாம் மரம் வளர்ப்பது நமக்கு மட்டுமல்ல கிளி, அனில் போன்ற உயிரினங்களுக்கும் பயன்தரும் என கூறியுள்ளார்.   

இவ்வுலகில் மறைவதற்கு முன்பாக நிரந்தரமான நன்மை ஏதாவது நீ செய்யவேண்டுமென நினைத்தால், மரம் நடுவதை மறந்துவிடாதே. இந்த உலகை விட்டு நீ சென்றாலும் அது உனக்கு நிரந்தர நன்மையை தேடித் தரும்.

                        உலக மயமாக்கலின் விளைவாக நமது முன்னோர்கள் வளர்த்த பலவகை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அழியக்கூடிய மரங்கள் என்ற நூலின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் 28 வகையான மரங்களை குறிப்பிட்டுள்ளார். அவைகள் சரக்கொன்றை, கடுக்காய், அலையாத்தி, மகாவில்வம், சந்தனம், நாவல், பூவரசு, உருத்திராட்சம், திருவோடு, கொடுக்காய் புளி, புன்னை, பனை, பலாசம், ஒதியை, இலுப்பை, இலந்தை, வெட்டிவேர், பேய் அத்தி, மாவிலங்கம், மகிழம், தில்லை, குங்குமப்பூ, தான்றி , சேராங்கொட்டை, கோங்கு, ஆணைப்புளி, சந்தனவேங்கை, வெள்ளவேல் ஆகிய மரங்களாகும். இதுமட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான மரங்கள் அழியக்கூடிய சூழ்நிலையில் உள்ளன. அவைகளை நாம் காக்க வேண்டும். இது போன்ற மரங்களை நாம் வளர்க்க முன் வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆவல்.

இக்கட்டுரையில்  சில மரங்களின் பயன்களை பற்றி பார்க்கலாம்.

கடுக்காய்:
            கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன.
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி, மனிதனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

“காலை இஞ்சி கடுப்பகல்  சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனமே” என்ற சித்தர் பாடல் கடுக்காயின் மகத்துவத்தை கூறுகிறது. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதேயாகும்.

சந்தனம்:
            தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும்  உடையது.
இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும்.
            சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.

நாவல்:
            நாவல் மரம் பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது இந்தியா மற்றும் இந்தோனேசியாவுக்கு உரியது. 30 மீட்டர் வரை வளரும். 100 ஆண்டுகள் வரை வாழும்.நாவல் மரத்தின் பட்டை, நாவற்ப்பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை ஆகும்.  எல்லா வயதுடையவரும் சாப்பிடும் பழம் நாவல் பழம். இதை நவ்வாபழம் என்று அழைப்பார்கள்.

நாவல் படிப்பது சுவாரசியம்!
நாவல் சுவைப்பது சுகவாசியம்!!

பூவரசு:
            புவிக்கரசனாகிய பூவரசன் காய கல்ப மரமாகும்.வேம்பு போல நூற்றாண்டு கால மரம். மருந்துக்கு மிகவும் ஏற்றது. தென்னிந்தியாவில் அதிகமாக் காணப்படுகிறது. பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர எளிதில் குணம் கிடைக்கும். பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

மகிழம்:
            ஆண்டு முழுவதும் இலை உதிர்க்காது. இந்த மரத்தின் அடியில் சென்று பார்த்தால், சூரிய ஒளி நுழைய முடியாத அளவுக்கு இலைகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும். மகிழமரத்தின்  பூ – தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும், விதை – குளிர்சியூட்டும், தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.

மகிழத்தின்  நிழலில்
மகிழ்ச்சியாக தூங்கலாம்!

கொடுக்காப் புளி:
            சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும்.இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகவும் பயன்படும். வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்.

புன்னை
            இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட புன்னை மரம் குளுசியேசியேஎன்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. கடலோர மாவட்டங்களில் சவுக்கு மரத்திற்கு மாற்றாக சிறந்த காற்றுத் தடுப்பானாகவும் பயன்படுகின்றது. மண் பாதுகாப்பு மற்றும் மண் அரிப்பைத் தடுப்பதற்கு உதவுகின்றது.இம்மரம் ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மையுடையது. கடலோரப் பகுதிகளில் நன்கு வளருவதால் பல விவசாயிகள் இம்மரப் பயிரை வளர்த்துப் பயனடைகின்றனர். அனைத்து வகையான மண்ணிற்கும் ஏற்றமரமாகக் காணப்படுகின்றது.

பனை:
            பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் . பனை மரம் தமிழ் தாவரம் என அறியப்படுகிறது.பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம்.
இதில் 34 வகையான பனை மரங்கள்  உண்டு. அவைகள்:
1.ஆண் பனை, 2. பெண் பனை, 3.கூந்தப்பனை, 4.தாளிப்பனை, 5.குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7.ஈச்சம்பனை, 8.ஈழப்பனை, 9.சீமைப்பனை, 10.ஆதம்பனை, 11.திப்பிலிப்பனை, 12.கிச்சிலிப்பனை, 13.உடலற்பனை, 14.குடைப்பனை, 15.இளம்பனை, 16.கூரைப்பனை, 17.இடுக்குப்பனை, 18.தாதம்பனை, 19.காந்தம்பனை, 20.பாக்குப்பனை, 21.ஈரம்பனை, 22.சீனப்பனை, 23.குண்டுப்பனை, 24.அலாம்பனை, 25.கொண்டைப்பனை, 26.ஏரிலைப்பனை, 27.ஏசறுப்பனை, 28.காட்டுப்பனை, 29.கதலிப்பனை, 30.வலியப்பனை, 31.வாதப்பனை, 32.அலகுப்பனை, 33.நிலப்பனை, 34.சனம்பனை.

ஒவ்வொரு மரத்திற்கும் இது போன்று பல வகைகள் உள்ளன.

இலுப்பை
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை “ என்ற ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சுவை கொண்டது இலுப்பைப்பூ.

“பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு”.

இது ஒரு தாலாட்டுப் பாடல். நல்ல உறுதியான  இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் குழந்தையை வைத்து தாலாட்டு பாடுவது பழங்கால வழக்கமாக இருந்தது.

            இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய், இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது. இலுப்பைப் பூவை பாலில் போட்டு காய்ச்சி தினமும் பருகினால் தாது விருத்தி ஏற்படும், தாகம் தணியும்.

இலந்தை

            இலந்தைப் பழத்தின் தாயகம் சீனா. சீனா என்றால் தரம் இல்லை என்ற எண்ணம்தான் நம் மனதில் தோன்றும். ஆனால் சீனாவில் இருந்து நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஒன்று இருக்கிறதென்றால் அது இலந்தை மரம் என்று கூறுவது மிகப்பொருந்தும்.
இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.
பயன்தரும் பாகங்கள் : இலை, பட்டை. வேர்பட்டை பழம் ஆகியவை.
            இலந்தைனு சொன்னதுமே எல்லாருக்கும் சின்னவயசு ஞாபகம் வந்து அலைமோத ஆரம்பிச்சுடும். பள்ளிக்கூடத்து வாசல்ல கூறுகட்டி வித்துட்டிருப்பாங்க. 10 காசு, 25 காசுனு கொடுத்து, இலந்தைப் பழத்தை வாங்கி ருசிச்சதுஇப்ப நினைச்சாலும் சப்புக் கொட்டுற விஷயம்தான்.
            இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். இலந்தையில் மாவுப் பொருள் , புரதம், தாது உப்புகள், மற்றும் இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம். இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
            எனவே  மரங்களின் பயன்களை இந்த ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாது. மரங்களை அழிக்காமல் வருங்கால தலைமுறையினர்களுக்கு நாம் கொடுக்கும் சொத்தாக மரங்களை இவ்வுலகில் விட்டுச் செல்லுங்கள்.  இயற்கை விவசாயத்தின் தந்தை ஜப்பானின் மசானபு புக்காகோ அவர்கள் ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற புத்தகத்தில் இயற்கை விவசாயத்தின் அருமையையும், விதை பந்து உருவாக்குவது பற்றியும் கூறிவுள்ளார். அந்த திட்டத்தை சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இன்று கையில் எடுத்துள்ளார்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சியே!.

விதைகள் விளைய விரும்புகின்றன!
விதைப்பதற்கு நம் மனம் விரும்ப வேண்டும்!
நாம் நடுவோம் மரத்தை!
அறுவடை செய்வோம் நன்மையை!


மு. முகமது யூனுஸ்
(ஆவுடை யூனுஸ்)


0 comments:

Post a Comment