கல்வியில் புரட்சி ஏற்படுத்திய இந்திய திருநாட்டின் முக்கிய தலைவர் அபுல்கலாம் ஆசாத்!
இவரின் பிறந்த நாளான நவம்பர் 11 அன்று தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.
'அரிஸ்டாட்டில், பிளாட்டோ, பிதாகரஸ் ஆகிய மூவரின் திறமையும்
ஒன்றாக இணைந்த கற்றலின் பேரரசர்!" என்று அண்ணல் காந்தி அவர்களால் போற்றப்பட்ட அபுல்கலாம் ஆசாத் அவர்களின் திறமையை நாடு கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றது என்பதை நினைக்கும்
போது மிகவருத்தமாக உள்ளது.
மௌலானா அபுல்கலாம் அவர்கள் தன் பெயருக்கு பின்னால் ஆசாத் என்று இணைத்துக் கொண்டார்கள். இவர் மேல் ஏற்பட்ட பற்றுக் காரணமாக சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில்
போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையோர்கள்
ஆசாத் என்று தங்களது பெயர்களில் சேர்த்துக் கொண்டார்கள். ஆசாத் என்றால் "விடுதலை" என்று பொருள்.
அன்பை, சகிப்புத்தன்மையை ஒன்றாக இணைந்து இயங்குவதை ஆழமாக மக்களிடம் வலியுறுத்திச் சொன்ன வரலாறு போற்றவேண்டிய மாபெரும் தலைவர்தான் மௌலானா அபுல் கலாம் ஆசாத். இந்தியாவில் வாழ்ந்த அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து சென்று, ஒரு புதிய அரசியல் சரித்திரம் படைத்தவர்.
தனது 19-வது வயதில் 1907 ஆம் ஆண்டு அரசியலுக்கு அபுல்கலாம் ஆசாத் வருகிறார். 1907 முதல் 1947 வரையிலும் கிட்டதட்ட ஆறு முறை சிறை சென்றுள்ளார் அபுல் கலாம் அவர்கள் பத்து ஆண்டுகளும் ஏழு மாதங்களும் சிறையில் கழித்துள்ளார்.
சிறந்த சிந்தனையாலும், சீரியக் கருத்தாலும், வசீகரிக்கக் கூடிய பேச்சாலும் மக்களை எளிதில் கவரக்கூடியவராக திகழ்ந்து விளங்கியவர்.
1913 காலக்கட்டத்தில்
அபுல் கலாம் ஆசாத் தனது
"அல் ஹிலால்" பத்திரிகையில்
ஆங்கிலேய அரசுக்கு எதிராக
இந்திய சுதந்திர போராட்ட உணர்வூப்பூர்வமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். இப்பத்திரிகை அரசுக்கு எதிராக செயல்படுகின்றது என காரணம் காட்டி 1914- ல் அதிகமான பிணைத்தொகை கட்டவேண்டுமென்று ஆங்கிலேய அரசு அபராதம் விதித்தது.
போராட்ட குணம் கொண்ட
ஆசாத் விடுவாரா. உடனடியாக அடுத்து "அல் ஃபலாஹ்" என்னும் மற்றொரு பத்திரிகையை தொடங்கினார்.
1920 காலக்கட்டத்தில் அபுல்கலாம் ஆசாத் காந்தியை சந்திக்கிறார்.
அண்ணல் காந்தியுடனான சந்திப்பு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக இருந்தது. சந்தித்த முதல் சந்திப்பிலேயே ஆசாத்தின் திறமையையும் போராட்ட குணத்தையும் கண்டு வியந்த காந்தி தன் இறுதி நாள் வரை ஆசாத் அவர்களை கூடவே வைத்து கொண்டார்.
1923-ல் தனது 35-வது வயதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் குறைந்த வயதில் இப்பதவியை பெற்ற ஒரே தலைவர் ஆசாத் ஒருவரே ஆவார்.
இந்து, முஸ்லிம் மற்றும் பிற சமூக மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டினார்.
'தேசப் பிரிவினை" என்ற பேச்சுக்கு இடமில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆவார். பிரிவினையை எதிர்த்து உண்ணாவிரதத்தை தலைநகர் டெல்லியில் மேற்கொண்டார் என்பதை நாம் என்றும் நினைவு படுத்த வேண்டும். இல்லையெனில் வரலாற்றை திரித்து கூறுபவர்கள் இவரையும் பிரிவினைவாதி என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் கல்வி அமைச்சராக இருக்கும் பொழுது கொண்டு வந்த பரிந்துரைகள்:
1. அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வி வழங்க வேண்டும்.
2. அனைத்து கல்வி திட்டங்களும் மத சார்பற்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
3. 14 வயது வரை கட்டணமில்லாத கல்வி வழங்க வேண்டும்.
4. தொழில்கல்வி, வேளாண்கல்வி மேலும் உயர்கல்வி கூடங்கள் நிறுவ வேண்டும்.
என பரிந்துரை செய்தார்.
வெறும் பரிந்துரையோடு நிற்காமல் தன்னுடைய 11 ஆண்டுகால கல்வி அமைச்சர் பதவியில் வருங்கால தலைமுறைகளின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையுடன் ஆசாத் அவர்கள் செயல்பட்டார் என்பதை நாம் தீர்க்கமாக அறிந்து கொள்ள முடியும்.
அதற்கு சான்றாக கல்விக்காக இவர் உருவாக்கிய நிறுவனங்களே சாட்சி...
1. இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணமான Council of Scientific & Industrial Research (CSIR) அமைப்பு.
2. இந்திய தொழில் நுட்ப நிறுனங்கள் -INDIAN INSTITUTES OF TECHNOLOGY
3. லலித் கலா அகாடமி
4. சாகித்ய அகடாமி
5. பல்கலைக்கழக மானியக்குழு - UNIVERSITY GRAND COMMISSION
உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத். இவர் இந்த உலகை விட்டு சென்றபிறகு 1992-ஆம் ஆண்டு இவருக்கு "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது.
அவரின் பிறந்தநாள் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒருநாள் மட்டும் இவரை போற்றாமல் எப்பொழுதும் மனிதகுலம் போற்ற வேண்டிய முக்கிய தலைவர்களில் ஒருவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆவார்.
ஆசாத் ஆழமாக கல்வியை கற்றவர்!
அதனால்தான்
கல்வியிலும், அரசியலிலும், ஆன்மீகத்திலும், பத்திரிகைத் துறையிலும் சிறந்து விளங்கமுடிந்தது.
மாணவர்கள் மருத்துவத்தை மட்டும் நாடிச் செல்லாமல் ஊடகத்துறை, சட்டத்துறை, வேளாண்துறை, நுண் அறிவியல் போன்ற துறைகளிலும் IAS, IPS போன்ற உயர் பதவிகளை அடைய இன்று முதல் குறிக்கோளுடன் செயல்பட தொடங்கினால் வெற்றி நிச்சயம்...
- ஆவுடை யூனுஸ்
11.11.2021
0 comments:
Post a Comment