[தமிழ்மொழி மற்றும் மொழியியல் ஆய்வாளர் - 25 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப்பணி - தமிழ்மொழித்துறைத் தலைவர் - மொழியியல் ஆய்வுப்பிரிவு இயக்குநர் - தற்போது சென்னையிலுள்ள என்.டி.எஸ் லிங்க்சாஃப்ட் சொலூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் முகநூலில் என்னை பற்றி கூறிய வரிகள்: (உங்கள் பார்வைக்கு)
அல்லாஹ்வின் நாட்டத்தினால், புதுக்கோட்டை மாவட்டம், அம்மா பட்டினம்(அஞ்சல்), ஆவுடையார் பட்டினம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த நான் முதன்மை ஆளாக முதுகலை பட்டம் பெற்று, என் ஆராச்சி பணியில் முதல் படிக்கட்டு ஏறி உள்ளேன் என்பதை பனிவுடன் கூறிக்கொள்கிறேன். இது தற்புகழ்ச்சியென எண்ண வேண்டாம் மாறாக இந்த பதிவு என்னை போன்று சிறிய கிராமங்களில் பிறந்தவர்களுக்கு கல்வி பயில ஓர் உந்துசக்தியாக இருக்கும் என நம்புகிறேன்.]
கணினித்தமிழ் ஆய்வாளர் (5)
திரு. மு. முகமது யூனுஸ் .... நன்கு வளர்ந்துவருகிற ஒரு கணினிமொழியியலாளர். கணினியியல் , மொழியியல் இரண்டிலும் முறைசார் கல்விபெற்ற ஒரு இளம் ஆய்வாளர். கணினியியலில் எம்எஸ்சி பட்டம், எம்ஃபில் பட்டம் பெற்ற இவர், பின்னர் மொழியியலிலும் ஒரு முதுகலைப் பட்டமும் இயற்கைமொழி ஆய்வுத்துறையில் ஒரு முதுநிலைப்பட்டயமும் பெற்றிருக்கிறார். கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் துறையில் செயல்படுவதற்குரிய இரண்டு துறைகள் அறிவையும் பெற்ற இவர், தற்போது தரவக உதவியுடன் தமிழ்மொழியை மின்வழிக்கல்வியாக ( Corpus-based E-learning of Tamil ) அளிப்பதற்கான ஒரு ஆய்வைத் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக மேற்கொண்டுவருகிறார்.
கல்லூரிப்படிப்பிற்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் தஞ்சைப் பேராவூரணியில் வெங்கடேஸ்வரா கல்லூரியிலும் ஓராண்டு அறந்தாங்கியில் நைனா முகமது கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
2008 ஆம் ஆண்டு முதல் மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அங்கே இவரது துறை , இந்தியமொழிகளுக்கான மொழியியல் தரவுசேர்த்தியம் ( Linguistic Data Consortium for Indian Languages - LDC-IL) என்ற ஆய்வுத்திட்டத் துறையாகும்.இந்தத் திட்டம் இந்திய நடுவண் அரசின் 11-ஆம் ஐந்தாண்டுத்திட்டத்தில் நிறுவப்பட்டதாகும். இத்திட்டத்தின்கீழ் எழுத்து, பேச்சு, சைகைமொழித் தரவுகளைத் தரவகமையத்தில் சேமித்துப் பாதுகாத்தல், அதனடிப்படையில் தரவகம் சார்ந்த மொழிக்கருவிகளை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டுவருகிறார். இவரது வழிகாட்டுதலில் 12 மாணவர்கள் எம்ஃபில் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
இவர் தன்னுடன் பணியாற்றும் ஆய்வாளர்களுடன் இணைந்து, கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் சார்ந்த பல மொழிக்கருவிகளை உருவாக்கியுள்ளார்கள். அவற்றில் முக்கியமானவை - தரவகத்தில் எழுத்து. சொல் ஆகியவற்றின் நிகழ்வெண் ( Frequency Counter) , மையச்சொல் தேடல் ( Key word Finder), 12 இந்தியமொழிகளுக்கான சொல்வகையை அடையாளப்படுத்தும் கருவி, இந்திய மொழிகளை அடையாளம் காணும் கருவி ( Language Identifier), இஸ்கி குறியேற்றத்தில் உள்ள ஆவணங்களை ஒருங்குறிக் குறியேற்றத்தில் மாற்றித்தரும் குறியேற்றமாற்றி (Encoding Converter), உச்சரிப்பு அகராதி (Pronunciation Dictionary) ஆகியவையாகும்.
ஆறு ஆய்வுக்கட்டுரைகளைத் தரம்வாய்ந்த ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். தேசிய, சர்வதேசியக் கருத்தரங்குகள் பலவற்றில் பங்கேற்று ஆய்வுரை வழங்கியுள்ளார். தேசிய அளவில் மொழித்தொழில்நுட்பத்திற்கான பயிலரங்குகளை நடத்தியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு மொரிஷியஸ் நாட்டில் நடைபெற்ற கல்வியும் மொழித்தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு பயிலரங்கிற்குப் பயிற்சியாளராக அழைக்கப்பட்டிருந்தார். தரவகம், உருபனியல், இலக்கணக் குறிப்போடு அமையும் விரிதரவு ( Linguistically annotated Corpus) , தகவல்மீட்பு ( Information Retrieval) , எழுத்துரை-பேச்சுரைமாற்றி ( Text to Speech _ TTS) , மூடுல் இயங்குதளம் போன்றவற்றில் இளைஞர்களுக்கு பயிற்சியளித்துவருகிறார்.
தமிழ்மொழி, மொழியியல், கணினியியல் மூன்றிலும் திறன்பெற்ற இவரைப் போன்றவர்களால்தான் கணினித்தமிழ் வளரமுடியும். இவர்களைப் போன்ற இளைஞர்களுக்குத் தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுநிறுவனங்களிலும் உரிய வேலைவாய்ப்பும், ஆய்வு மேற்கொள்வதற்குத் தேவையான சூழலையும் அளித்தால், ஒரு சில ஆண்டுகளில் கணினித்தமிழ் உலக அளவில் வளர்ச்சி அடைந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
-முனைவர் ந.தெய்வசுந்தரம்
[my mailid: yoonussoft@gmail.com]
Nice introduction
ReplyDeleteநன்றி!
ReplyDelete