சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Monday, 26 October 2015

எந்த கல்வித்திட்டத்தை தேர்ந்தெடுப்பது?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

     இன்றைய காலகட்டங்களில், சமச்சீருக்கு முந்தயக் கல்வி, சமச்சீர் கல்வி, மற்றும் மதம் சார்ந்த கல்வி போன்ற கல்விகளை பற்றி பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

     ஒருவருடைய கல்வி சார்ந்த கருத்துக்கள் மற்றவருடைய கல்வி சார்ந்த கருத்திலிருந்து மாறுபடலாம். அதில் எந்த வித தவறும் இல்லை. ஏனெனில் கல்விக்கான பாடத்திட்டம் இறைவனால் உருவாக்கப் படவில்லை. அவைகள் மனிதர்களால் உருவாக்க கூடியதாக இருக்கின்றன. அதனால் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட  பாடத்திட்டம் வேறொரு காலகட்டத்தில் தவறுகளாக தோன்றுகின்றன.

     மனிதன் ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பான், பின்பு அந்த கண்டுபிடிப்பு பொய்த்து போவது என்பது புதிதல்ல. ஏனெனில் மனிதன் என்பவன் தவறு செய்யக் கூடியவனே. உதாரணமாக, மனித இனம் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றது என்ற கடவுளின் இருப்பை மறுத்த சார்லஸ் டார்வினின் கொள்கை பொய்த்துப் போனது. ஆனால் இன்று நாம் பற்பல நோய்களால் பாதித்து கொண்டு இருக்கிறோம். அவற்றிற்கான மருந்துகளையும் ஆராச்சியாளர்கள் கண்டுப்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆராச்சியாளர்கள் மருந்துகளை கண்டுப்பிடித்ததின் பயனாகத்தான் நாம் பல நோய்களுக்கான நிவாரணம் பெறுகிறோம். அலோபதி மருத்துவத்தில் தீர்க்க முடியாத வியாதிகளை யுனானி மருத்துவத்தில் தீர்க்கலாம், யுனானியில் முடியாததை ஆயுர்வேதத்தில் பலன் அடையாளம். அதற்காக ஆயுர்வேதம் தான் சிறந்தது, யுனானி தான்  சிறந்தது என வாதிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பலவகையான மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள். நோயை  கொடுப்பவனும் அல்லாஹ்வே! அதை தீர்ப்பவனும் அல்லாஹ்வே! அது மட்டுமில்லாமல் இறைவன் வழங்கிய மூளையைக் கொண்டு பலவகையான புதுப்புது கண்டுபிடிப்புகளை மனிதன் நிகழ்த்துகிறான்.


     தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்திய கல்வி முறை, ஓரியன்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன், சிபிஎஸ்ஈ மற்றும் மெட்ரிகுலேஷன் என ஐந்து வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த வகையான  பாடத்திட்ட முறைகளால், பல ஆண்டுகளாக ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தன. அதை யாரும் மறுக்க முடியாது. மேலும், இத்தகைய கல்வி முறை சமூகத்தில் மாணவர்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வை உருவாக்கி வந்தது. தனியார் கல்வி நிறுவனங்களின் கண்மூடித்தனமான கட்டண கொள்ளைகளை இந்த கல்வி முறைகள் ஊக்கப்படுத்தியும் வந்தன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 14-ம் பிரிவில் அனைவரும் சமம் என தெரிவித்தாலும், சாதி, சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக எல்லோரும் ஒரே மாதிரியான கல்வியை பெற முடியவில்லை. அத்தகைய ஏற்றத்தாழ்வை சமச்சீர் கல்வி முறை நீக்கியுள்ளது. இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வு உள்ள நாட்டில் "சமச்சீர் கல்வி" என்பது அவசியத் தேவையாகும்.


  என்னுடைய பார்வையில் எல்லோருக்கும் ஏற்ற கல்வி சமச்சீர் ஒன்றே. ஆனால் இப்போது இருக்கும் சில குறைகளை களைந்து, அனைத்து சமுதாயப் படித்த கல்வியாளர்ககளை ஒன்றிணைத்து உருவாக்கும் கல்வியே சிறந்த கல்வி. இது ஒரு பொதுப் பிரிவு (General Category) போல யாருவேண்டுமானாலும் கற்க கூடிய ஒன்று. இஸ்லாம் சார்ந்த கல்வி, கிருஸ்த்துவர் சார்ந்த கல்வி, இந்து சார்ந்த கல்வி என்பது ஒதுக்கப்பட்ட பிரிவு (Reserved Category) யை போல அந்தந்த மதத்தினருக்கு உரியதே!


     வேற வழியில்லை என்று நான் சமச்சீர் கல்வியை கூறவில்லை, மாற்றம் வேண்டும் என்றுதான் கூறுகிறேன். அந்த மாற்றம் நிகழ ஆட்சி அதிகாரம் நம் கையில் வரவேண்டும். அதற்கு  கல்வி அவசியம். அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் பாடத்திட்டத்தை(Syllabus)  உருவாக்கும் கல்வியாளர்களாக நாம் மாற வேண்டும் அல்லது கல்வியாளர்களை நாம் உருவாக்க முயல வேண்டும்.


 கல்வி என்பது கல்வியால் கிடைக்கும் அறிவு வாழ்க்கைக்குப் பயன்படும்போது அந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக அமைகிறது. எந்த ஒரு பாடச்சாலையிலும் தன் குடும்பம், தன் வேலை மட்டுமே முக்கியம் என்று கூறவில்லை. India is my country all Indian are brothers and sisters என்றுதான் கூறுகிறது. ஆசிரியராக பணியாற்றுபவர்கள், IT நிறுவனத்தில் பணிபுரிய கூடியவர்கள், மருத்துவர்கள் போன்ற கல்வி கற்ற நல்ல மனிதர்கள் எந்த வித விளம்பரமும் இல்லாமல் சமூக சேவை  செய்து வருகிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் பலபேர்களுக்கு தெரிவதே இல்லை. எல்லாம் இறைவன் அறிவான்! 

     பிற மக்களுக்கு அறிவாக புகட்டப்படும் அனைத்தும் முஸ்லிம்களுக்கு பொருந்துமா? என கேள்வி எழலாம். ஏன் பொருந்தாது, பொதுவான பாடங்கள் அனைத்தும் எல்லோருக்கும் பொருந்த கூடியதேயாகும். உதாரணமாக, மருத்துவ(Doctor) படிப்பு, கணிப்பொறி(Computer Science, Engineering) சார்ந்த  படிப்பு, சான்றிதழ் படிப்புகளில் (ITI) அடங்கும் ஓராண்டு படிப்புகளான Fitter welder, Machinist, AC Mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. இவைகள் போன்ற அனைத்தும் ஒரு சாரரை சார்ந்தது அல்ல என்பது தங்களுக்கு தெரியாததொன்றுமில்லை. BA(History), BA(Islamic studies) போன்ற வரலாற்று சார்ந்த படிப்புகள் வேண்டுமானால் அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களின் விருப்பபடி தேர்ந்தெடுக்கலாம்.

     கணிதப்பாடத்தில் படிக்கக்கூடிய வெக்டர் இயற்கணிதம், பகுமுறை வடிவியல், வகை நுண்கணிதம் போன்ற சிக்கலான கணக்கு பாடங்கள் எந்த வகையான மதச்சாயம் பூசப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. கணிதப்பாடங்கள்தான் கணினி, பொறியியல் போன்ற படிப்பிற்கு தேவையான அடிப்படை அறிவு ஆகும். அதை  நாம் புறம் தள்ளமுடியாது.

     இறைவன் மனிதனை படைத்து, அவனுக்கு உயிரைக் கொடுத்து அறிவைக் கொடுத்து, சிந்திக்கத் தூண்டுகிறான். இந்தியாவில் இருக்கும் எல்லா மதத்துவரும் இஸ்லாம் சொல்லியப்படிதான் சிந்திக்க வேண்டும் என்று சொல்லுவதே தவறு. முஸ்லிம் மக்களை வேண்டுமானால் அல்குரான், ஹதீஸ்களை ஆராய்ந்து அதன்படி சிந்திக்க, ஆராய்ச்சி செய்ய தூண்டலாம். அதே நேரத்தில், மாற்று மத நண்பர்கள் விருப்பினால் அவர்களுக்கு  அல்குரான், ஹதீஸ்களை விளங்க வைக்கலாம்.




ஒரு முஸ்லிம் என்பவன் எந்த மதத்தையும் சார்ந்த கருப்பரைரோ, வெள்ளையரைரோ, ஏழையையோ, பணக்காரயைரோ எல்லோரிடம் அன்பாக பழக கூடியவனாக இருக்க  வேண்டும். எனவே நாம் எல்லா மதங்களையும் சேர்ந்த மக்களை அனுசரித்து போவது தான் சாலச்சிறந்தது. அதற்காக தன் மார்க்க கொள்கையில் இருந்து விலகிவிட்டான் என்ற அர்த்தம் இல்லை.

     முஸ்லிம்களிடையே வாசிக்கும் பழக்கம்  குறைந்து வருகிறது. அவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். இவ்விடத்தில் புத்தகம் ஒரு நல்ல நண்பன் என்ற பழமொழியை நினைவு கூற விரும்புகிறேன். அதுமட்டுமல்ல ஹதீஸில் "கல்வியை கற்பவனாக இரு, அல்லது கற்றுக் கொடுப்பவனாக இரு, அல்லது கற்பவருக்கு உதவி செய்பவனாக இரு, நான்காவது நபராக மட்டும் இருக்காதே" என்று கூறுவதன் மூலம் கல்வியுடன் தொடர்பு இல்லாமல் இருப்பது நபியுடைய கட்டளையை மீறும் செயல் என்றும் புலனாகிறது. ஆனால் நீ இந்த புத்தகத்தைதான் வாசிக்க வேண்டும் என்று யாரை நாம் கட்டாயப்படுத்த முடியாது. இது அவரவர் விருப்பு வெறுப்பைச் சார்ந்த விசயம். We can give our suggestion to read some particular books but we can’t force them.

     இந்திய கல்வி அமைப்பு இந்துத்துவாவை நோக்கி செல்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில், நாம் ஒன்றை ஒப்புக்கொன்று தான் ஆக வேண்டும், படிப்பு, அரசியல் நமக்கு ஆகாது என்று அவைகளை நாம் புறம்தள்ளி விட்டோம். அதனால் ஆட்சி அதிகாரம் இல்லாத காட்டை இழந்த சிங்கம் போல கர்சித்து கொண்டு இருக்கின்றோம். நம்மிடமுள்ள வேற்றுமை நீங்கி! ஒற்றுமை ஒங்க!! பாடுபட வேண்டும்.

    
என்றும் அன்புடன்,

-எம். எம். யூனுஸ் -

ஆவுடையார் பட்டினம்

2 comments: